பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் அமைக்க விறகுகள் குவித்த பக்தர்கள்

பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் அமைக்க பக்தர்கள் விறகுகளை குவித்துள்ளனர்.

Update: 2022-03-19 20:54 GMT
பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் அமைக்க பக்தர்கள் விறகுகளை குவித்துள்ளனர்.
குண்டம் விழா
சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா வருகிற 22-ந் தேதி (நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவை சேர்ந்த பக்தர்களும் இந்த விழாவில் லட்சக்கணக்கில் கூடுவார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
குவிக்கப்பட்ட விறகுகள்
குண்டத்தை வேம்பு, ஊஞ்ச மரங்களை (விறகுகள்) கொண்டு பற்ற வைப்பார்கள். இதற்காக பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மரங்களை வெட்டி எடுத்து வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவதற்காக குண்டத்தின் முன்பு குவித்து வைத்துள்ளார்கள்.
இந்த மரங்களை குண்டம் இறங்கும் அன்று அதிகாலை 2 மணி அளவில் தீ மூட்டி தணல் ஏற்படுத்துவார்கள். இந்த தணலில் பக்தர்கள் இறங்கி    நடந்து செல்வார்கள்.
குண்டம் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் வந்து நின்று இடம் பிடிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு குண்டத்துக்கு முதல் நாள் தான் பக்தர்கள் வரிசையில் வந்து நிற்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் குண்டம் இறங்கும் பக்தர்கள் பலர் தங்களுடைய வேட்டி, துண்டு, சேலைகளை வரிசை கம்பிகளில் போட்டு இடம் பிடித்துள்ளார்கள். 

மேலும் செய்திகள்