திம்பம் மலைப்பாதையில் 2 நாட்கள் கனரக வாகனங்கள் செல்ல தடை

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திம்பம் மலைப்பாதையில் 2 நாட்கள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் துறை அறிவித்து உள்ளது.

Update: 2022-03-19 20:37 GMT
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திம்பம் மலைப்பாதையில் 2 நாட்கள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் துறை அறிவித்து உள்ளது. 
குண்டம் விழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் விழா வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் குண்டம் விழா நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
மேலும் பண்ணாரி கோவில் அருகே இருந்து திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. குண்டம் இறங்குவதற்காக தமிழக, கர்நாடக பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பக்தர்களுக்கு இடையூறாகவும் இருக்கும்.
தடை
எனவே குண்டம் விழாவையொட்டி பண்ணாரி வழியாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணி முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை 2 நாட்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கனரக வாகன ஓட்டிகள் தடை விதிக்கப்பட்ட 2 நாட்கள் பண்ணாரி, திம்பம் மலைப்பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும். 
இதுகுறித்த தகவல் போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
மேலும் இதுபற்றி அறிவிப்பு பேனர்கள் பண்ணாரி கோவில், ஆசனூர் சோதனை சாவடி, காரப்பள்ளம் சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்