இளம் பெண்ணை ஏமாற்றிய ஸ்கேன் சென்டர் ஊழியர் மீது வழக்கு
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஸ்கேன் சென்டர் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மல்லபுரம் கட்சிக்கட்டு தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் விவேக் (வயது 30). இவர் மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனையடுத்து 2 பேரும் நெருங்கி பழகி உள்ளனர். இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால் விவேக் திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம் பெண் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து, விவேக்கை வலைவீசி தேடி வருகிறார்.
மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதுகுறித்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.