மணல்மேட்டில், பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும்
மணல்மேட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மணல்மேடு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மணல்மேடு:
மணல்மேட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மணல்மேடு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
மணல்மேடு பேரூராட்சி மன்றத்தின் முதல் சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கண்மணி அறிவடிவழகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மணல்மேடு பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினார். இதனையடுத்து நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
கண்மணி அறிவடிவழகன் (தலைவர்):- மணல்மேடு பேரூராட்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், நாம் அனைவரும் கட்சி பாகுபாடுகளை கடந்து 15 வார்டுகளின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
ஆம்புலன்ஸ் சேவை
சுப்பிரமணியன் (துணைத் தலைவர்):- பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள நாகநாதசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மதனசிவராஜ் (அ.தி.மு.க.):- 2003-ம் ஆண்டு கடைசியாக எடுக்கப்பட்ட வறுமைக்கோடு பட்டியலை மறுகணக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும். மணல்மேட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட வேண்டும்.
சங்கீதா (அ.தி.மு.க.):- புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரோஸ் நகரில் சாலை, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். போக்குவரத்து மிகுந்த வெள்ளாளர் தெரு, ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
பத்திரப்பதிவு அலுவலகம்
சத்தியராஜ் (விடுதலை சிறுத்தைகள்):- இலுப்பப்பட்டு மாதாகோவில் தெரு முதல் ராஜசூரியன்பேட்டை வரை இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
பாண்டியன் (அ.தி.மு.க.):- மணல்மேட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவிதா (தி.மு.க.):- 8-வது வார்டில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வேண்டும்.
கண்மணி அறிவடிவழகன் (தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன.