சாலை விரிவாக்கப்பணி
விருத்தாசலம் அருகே சாலை விரிவாக்கப்பணியை நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்குட்பட்ட விருத்தாசலம் - தொழுதூர் மற்றும் மதனத்தூர் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்த ராஜேந்திரப்பட்டினம் அருகே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சாலை பாதுகாப்பு அலகின், நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானம் சென்னை கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவு விழுப்புரம் கோட்ட பொறியாளர் சீனுவாசன் ஆகியோர் குறிப்பிட்ட சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோட்ட பொறியாளர் கடலூர் பரந்தாமன், விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளர் அறிவுக்களஞ்சியம், உதவி பொறியாளர்கள் விவேகானந்தன் மற்றும் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.