விவசாயிகளுக்கு பயிற்சி
வெண்ணந்தூரில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வெண்ணந்தூர்:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் மண்வள மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் மின்னக்கல் கிராமத்தில் 2 நாட்கள் நடந்தது. வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை தாங்கி, மண்வள பாதுகாப்பு மற்றும் அரசால் செயல்படுத்தபடும் முக்கிய திட்டங்கள் குறித்து பேசினார். நாமக்கல் மண் பரிசோதனை அலுவலர் தனலட்சுமி மண் மாதிரி எடுத்தல், அதன் அவசியம் குறித்து பேசினார். மேலும் விவசாயத்தில் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கபடும் சூழல் உருவாகியுள்ளது என்றும், அதை தடுக்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை காக்க வேண்டும் என்றும் கூறினார். நுண்ணூட்ட சத்தினை இடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் அவர் விரிவாக பேசினார். உதவி பேராசிரியர் சசிகலா, வேளாண்மை அலுவலர் ஆனந்தன் மற்றும் பலர் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அருண்குமார் செய்திருந்தார்.