முட்டை விலை குறைவதை கட்டுப்படுத்த வயது முதிர்ந்த கோழிகளை விற்க பண்ணையாளர்கள் முன்வர வேண்டும்-சங்க தலைவர் சிங்கராஜ் பேட்டி

முட்டை விலை குறைவதை கட்டுப்படுத்த வயது முதிர்ந்த கோழிகளை விற்க பண்ணையாளர்கள் முன்வர வேண்டும்.

Update: 2022-03-19 18:06 GMT
நாமக்கல்:
நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் நாகராஜன் வரவேற்றார். சங்கத்தின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்து பொருளாளர் இளங்கோ பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செயலாளர் சுந்தரராஜன் பேசினார். இதில் சங்கத்தின் கவுரவ தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அதன்பிறகு தலைவர் சிங்கராஜ் அளித்த பேட்டியில், முட்டை விலை குறைவதை கட்டுப்படுத்த 80 வாரங்களான வயது முதிர்ந்த கோழிகளை விற்க கோழிப்பண்ணையாளர்கள் முன்வர வேண்டும். தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், முட்டை விலை குறைவாலும் கோழிப்பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பண்ணையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கி கடனுக்கான தவணை தொகையை திருப்பி செலுத்த 6 மாத காலம் கூடுதல் அவகாசத்தை வங்கிகள் வழங்க அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் தீவன மூலப்பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் துணை தலைவர் சண்முகம், துணை செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் நித்யானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்