பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 1 டன் குட்கா பறிமுதல் 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 1 டன் குட்காவை பர்கூர் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பர்கூர்:
பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 1 டன் குட்காவை பர்கூர் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பர்கூர்-வாணியம்பாடி சாலையில் மசூதி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அந்த வேனில் 44 கோணிப்பைகளில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 62 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக வேனில் வந்த 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அவர்கள் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (வயது 41), பழைய தர்மபுரி அருகே உள்ள நாகசேனஅள்ளியை சேர்ந்த தமிழழகன் (24) தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (32) ஆகியோர் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்காவை சரக்கு வேனில், விழுப்புரத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வேன் உரிமையாளர், டிரைவர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து கடத்தப்பட்ட குட்கா மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.