வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.83 ஆயிரம் மோசடி; வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.83 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-19 16:46 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வைச் சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 38). இவரது செல்போன் எண்ணில் உள்ள வாட்ஸ்-அப்பிற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக குறுந்தகவல் வந்தது. 

இதை நம்பி ராஜேந்திரபிரசாத் ரூ.39 ஆயிரத்து 500-ம், அவரது தம்பி ரூ.43 ஆயிரத்து 500-ம் என மொத்தம் ரூ.83 ஆயிரத்தை அந்த வாட்ஸ்-அப் கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். ஆனால் பணம் அனுப்பிய பிறகு உறுதியளித்தபடி வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து ராஜேந்திரபிரசாத்தும், அவரது தம்பியும் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தூத்துக்குடி சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், காஞ்சீபுரம் மாவட்டம் மேலகதிர்பூர், மேட்டுக்குப்பம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கிருபாகரன் (33) என்பவர் காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில் ஆட்கள் எடுப்பதாக போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்ததும், போலியான மெயில் மூலம் வேலைக்காக தொடர்பு கொண்டவர்களை பணத்தை அனுப்பக்கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த கிருபாகரனை கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். இதுபோல் அவர் மேலும் 2 பேரை ஏமாற்றியுள்ளார் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்