மண் கடத்தல்; வாகனங்கள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதியில் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-03-19 16:40 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் திருநாவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தாமூர் கிராமத்தில் அந்த வழியாக மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் மறித்தனர். இதைபார்த்ததும், டிரைவர்கள் டிராக்டர்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். உடனே அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கோவிந்தன், சதீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தில் மண் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட புள்ளியல் துறை உதவி அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரியில் மண் அள்ளிக்கொண்டிருந்த மர்மநபர்கள் சிலர், போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மண் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்