ரேஷன் அரிசியை கடத்தியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்

ரேஷன் அரிசியை கடத்தியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்

Update: 2022-03-19 15:40 GMT
திருப்பூர்:
காங்கேயம் அருகே 16 டன் ரேஷன் அரிசியை கடத்தியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கடந்த 1-ந் தேதி காங்கேயம் அருகே வட்டமலை பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 10 ஆயிரத்து 20 கிலோ ரேஷன் அரிசி, 6 ஆயிரம் கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி, 700 கிலோ ரேஷன் கோதுமை ஆகியவை மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது. லாரியுடன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரியில் வந்த திண்டுக்கல் மாவட்டம் பழனி மைதீன் நகரை சேர்ந்த சர்புதீன் (வயது 51) என்பவரை கைது செய்தனர். அவர் பழனியில் ரேஷன் அரிசி, கோதுமையை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து பின்னர் கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சர்புதீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 சிறையில் அடைப்பு
சர்புதீனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, சர்புதீனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று சர்புதீனிடம் போலீசார் வழங்கினார்கள்.
இவர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினரால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்