திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது
திருப்பூர்,
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. நேற்று பீட்ரூட் கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இறங்கு முகம்
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறிகள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் அதிக அளவில் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் கடந்த காலங்களில் காய்கறிகளுக்கு நல்ல விலை இருந்த நிலையில் தற்போது காய்கறிகளின் வரத்து அதிகமாக இருப்பதால் காய்கறிகளின் விலை அடியோடு குறைந்துள்ளது. சுமார் இரண்டு மாத காலமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் காய்கறிகளுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பீட்ரூட் கிலோ ரூ.7
இந்த நிலையில் நேற்று திருப்பூர் மார்க்கெட்டிற்கு பீட்ரூட், பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட பல காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் மொத்த வியாபாரமாக 30 கிலோ எடை கொண்ட பீட்ரூட் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் பீட்ரூட்டின் விலை கிலோவுக்கு ரூ.7 மட்டுமே கிடைக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பீட்ரூட் கிலோ ரூ.70 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட புடலங்காய் கட்டு நேற்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பீர்க்கங்காய் கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு காய்கறி விலை அடியோடு குறைந்துள்ளதால், விவசாயம் முதல் விற்பனை வரை ஆகும் செலவுகளை கணக்கிட்டால் ஒன்றுமே மிஞ்சுவதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.