ராமநாதபுரத்தில் வேளாண்மைத்துறை திட்டங்கள்
ராமநாதபுரத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார்.
ஆய்வு
ராமநாதபுரத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் உயிர் உர உற்பத்தி மையத்தில் திட உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயி களின் பயன்பாட்டுக்கு நேரடியாகவும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாகவும் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 65 டன் திட உயிர் உரங்களும், 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உரங்கள் ராமநாதபுரம், விருதுநகர், நாகபட்டினம், திருச்சி, மதுரை, திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங் களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரசாயன உரம்
தற்போது தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்தி வருவதால் மண்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு அங்கக உரங்கள் மற்றும் உயிர் உரங்களை நெல், பருத்தி, நிலக்கடலை, பயறு வகைகள், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தி சாகுபடி செலவினை குறைத்து அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். சக்கரக்கோட்டை ஊராட்சியில் உள்ள உயிர் உர உற்பத்தி மையத்தையும், அக்கிரமேசி கிராமத்தில் பருத்தி சாகுபடி செயல் விளக்க திடலையும், திருஉத்தரகோச மங்கையில் விதை சுத்திகரிப்பு நிலையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பண்ணை கருவி
சின்ன அக்கிரமேசி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களையும், போகலூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகளையும் விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார். ஆலங்குளம் கிராமத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் மாணிக்கம் என்ற விவசாயி 5 ஏக்கரில் எள் விவசாயம் செய்து வருவதை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ், துணை இயக்குனர் பாஸ்கரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உதவி அலுவலர் வினோத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கொடி, வேளாண்மை உதவி இயக்குனர்கள் நாகராஜன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.