68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சீரமைக்கும் பணி தொடங்கியது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஊட்டி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
‘தினத்தந்தி’யில் செய்தி
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை கடைகளில் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், நெடுஞ்சாலைகள், முக்கிய பகுதிகள் என 68 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டது.
அதில் ரூ.5 நாணயத்தை செலுத்தி 1 லிட்டர் குடிநீர் பிடித்து கொள்ளலாம். இதற்கிடையில் கொரோனா பரவலால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டபோது, எந்திரங்கள் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
சீரமைக்கும் பணி
இதன் எதிரொலியாகஒரு வாரத்துக்குள் எந்திரங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வருகிற கோடைசீசனுக்கு முன்பாக பழுதடைந்த குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தொட்டபெட்டா சந்திப்பு, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா முன்பு உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை என்ஜினீயர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவி, நாணயங்கள் செலுத்தினால் அளவின்படி குடிநீர் வழங்கும் கருவி ஆகியவை சரியாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
கண்காணிக்க அறிவுரை
இதுபோன்று அனைத்து எந்திரங்களையும் பழுதுபார்த்து மீண்டும் செயல்பாட்டுக்குக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஒவ்வொரு குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்துக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
எந்திரத்துக்கு தேவையான குடிநீர், மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும். 4 இடங்களில் எந்திரங்களில் உள்ள முக்கிய பகுதிகள் திருடு போனதோடு, வெளிப்புற கூண்டு மட்டும் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் எந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.