பணி நிறைவடைந்ததால் பாலாறு 2-ம் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பாலாற்றின் மேம்பாலம் சீரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து நேற்று மாலை முதல் போக்குவரத்து தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-03-19 12:09 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே இரண்டு மேம்பாலங்கள் உள்ளது. இந்த மேம்பாலங்கள் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 7-ந் தேதி முதல் பணிகள் நடைபெற்று வந்தது. எனவே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கிராமப்புற சாலைகளில் திருப்பி விடப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு பாலங்களில் ஒரு பாலம் சீரமைக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக ஒருவழி பாதையாக போக்குவரத்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இரண்டாவது பாலம் சீரமைப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து நேற்று மாலை முதல் முழுவதுமாக இயக்கப்பட்டது. இதனை செங்கல்பட்டு மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சேரா தொடங்கி வைத்தார். மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரத்துடன் சென்றனர்.

மேலும் செய்திகள்