6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் சரவணன், நகர செயலாளர் லோகநாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பிரதாப், சந்திரன், கஜேந்திரன், மதியழகன், சுப்பிரமணி, ஆறுமுகம் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலைத்திட்டத்தை சீரழிக்கக் கூடாது, விவசாய தொழிலாளர் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.