கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பரபரப்பு பேட்டி
கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
பெங்களூரு:
பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆலோசித்து முடிவு
குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.
பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கக்கூடாது என்று எங்கும் சட்ட விதிகள் இல்லை. பைபிள் ஆக இருந்தாலும் சரி, குரான் ஆக இருந்தாலும் சரி, அதில் நல்ல கருத்துகள் இருந்தால் அதை பாடத்திட்டத்தில் சேர்த்தால் தவறு இல்லை.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
வரவேற்கிறேன்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறும்போது, ‘கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்த்தால் அதில் என்ன தவறு உள்ளது. குழந்தைகளுக்கு நல்ல அம்சங்களை கற்பிக்க முடிவு எடுத்தால் நான் அதை வரவேற்கிறேன்.
அதனால் சிலருக்கு இக்கட்டான நிலை ஏற்படும். ஆனால் அரசு அதை பற்றி கவலைப்படாமல் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். பகவத் கீதையில் நல்ல அம்சங்கள் உள்ளன. அதை பாடத்திட்டத்தில் சேர்த்தால் நல்லது தான்’ என்றார்.