நாகர்கோவில்வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிகிறது. புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக் குள்ளானார்கள்.

Update: 2022-03-18 21:01 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிகிறது. புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக் குள்ளானார்கள்.
குப்பை கிடங்கு
நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து காட்சி அளிக்கின்றது. இதில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே தற்போது நாகர்கோவில் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வலம்புரி விளை குப்பை கிடங்கில் ஏற்கனவே உள்ள குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
தீ விபத்து
இந்த குப்பை குவியலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதை கண்ட பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பை கிடங்கில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவியது.
இதையடுத்து தக்கலை, திங்கள்சந்தையில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
புகை மூட்டம்
தீயினால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு புகை மூட்டமாக இருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 
நேற்று இரவிலும் தீ தொடர்ந்து எரிந்தது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினார். துரிதமாக தீயை அணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்