சாக்கடையில் விழுந்த தீயணைப்பு நிலைய அதிகாரி சாவு

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-18 20:59 GMT
சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீயணைப்பு நிலைய அதிகாரி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 53). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரியாக வேலை செய்து வந்தார். 
 இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பிரவின்யா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் பிரவின்யா என்ஜினீயரிங் முடித்து உள்ளார். ஆகாஷ் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் குள்ளம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு மோட்டார்சைக்கிளில் சக்திவேல் செல்வது வழக்கம். 
சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலை குள்ளம்பாளையத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு சக்திவேல் சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

மேலும் செய்திகள்