2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னிமலை முருகன் கோவில்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர தினங்களில் தேரோட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டத்தை நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதைத்ெதாடர்ந்து சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 16-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர தேர் திருவிழா தொடங்கியது. பின்னர் மண்டப கட்டளை மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 6.15 மணிக்கு தேர் நிலைக்கு சாமிகளை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு 3 முறை சாமிகள் தேரை வலம் வந்தன. பின்னர் தேரில் சாமிகள் அமர வைக்கப்பட்டன. அப்போது தேருக்கு கற்பூரம் காட்டி பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 6.45 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அவர்களுடன் தி.மு.க நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, நகர இளைஞரணி நிர்வாகி அசோக், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், தி.மு.க நிர்வாகிகள் ஓட்டப்பாறை மனோகரன், புதுவலசு சாமிநாதன், கொடுமணல் கோபால் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு...
தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக பக்தர்கள் தேரை இழுத்து வந்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் காலை 7.45 மணிக்கு தேரை நிறுத்தினார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம் என்பதால் இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். பெண்கள் அதிக அளவில் வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தைப்பூச இசை விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் விழாக்குழு நிர்வாகிகள் கே.சி.ரத்தினசாமி, ஆர்.பழனிவேலு, பொன்.ஈஸ்வரமூர்த்தி, சுப்புசாமி, செந்தில் உள்ளிட்டோர் முன்னின்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்பட்டது. இதில் சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் சி.பிரபு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சதீஸ் என்கிற பி.சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு மகா தரிசனமும், நிறைவு நிகழ்ச்சியாக இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.