ஓடும் ரெயிலில் பிறந்த ஆண் குழந்தை புதரில் வீச்சு
சேலம் அருகே ஓடும் ரெயிலில் பிறந்த ஆண் குழந்தை புதரில் வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
ஓமலூர்:-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் பிறந்த ஆண் குழந்தை புதரில் வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
குழந்தை புதரில் வீச்சு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரமச்சூரில் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே கேங்மேன் இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று புதரில் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது புதரில் கிடந்த குழந்தை, பிறந்து சில மணி நேரமே ஆனது என்பது தெரியவந்தது. ஆனால் அந்த குழந்தை யாருடையது?, அதனை புதரில் வீசி சென்றது யார்? என தெரியவில்லை.
தூத்துக்குடி இளம்பெண்
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஜோஸ் ராணி (வயது 22) ரெயிலில் சென்றபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய அக்காள் இஸ்மாலா தங்கராணி சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார். ஜோஸ் ராணியை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவருக்கு குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனது தெரியவந்தது.
இதனால் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓமலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது ஜோஸ் ராணி மயக்க நிலையில் இருந்தார். இதனால் அவருடைய அக்காள் இஸ்மாலா தங்கராணியிடம் போலீசார் விசாரித்தனர்.
ஓடும் ரெயிலில் குழந்தை பிறந்தது
அப்போது அவர் ஜோஸ் ராணிக்கு திருமணமாகவில்லை என்றும், தனக்கு ராணுவ வீரரான சைமன் என்பவருடன் திருமணமாகி, தற்போது அவர் புனேவில் இருப்பதாக கூறினார். மேலும் கயத்தாறில் இருந்து பெங்களூருவுக்கு ரெயிலில் சென்றபோது தனது தங்கை ஜோஸ் ராணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது ஜோஸ் ராணிக்கு ஓடும் ரெயிலில் குழந்தை பிறந்தது என்றும், அதனை ஓமலூர் அருகே புதரில் வீசி சென்றதையும் அவர் ஒப்பு கொண்டார். மேலும் ஜோஸ்ராணிக்கு உடல்நிலை மோசமானதால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறினார்.
தாயிடம் ஒப்படைப்பு
இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையை, அதன் தாய் ஜோஸ் ராணியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
ஓமலூர் அருகே பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை புதரில் வீசப்பட்டதும், போலீசார் அதனை மீட்டு தாயிடமே திரும்ப ஒப்படைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.