போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி வியாபாரிகளிடம் மோசடி
நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி வியாபாரிகளிடம் பணம் வசூலித்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக ‘டிப்-டாப்’ உடை அணிந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்துள்ளார். அவர் தன்னை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி, சாலையோர கடைகளில் பணம், பழங்கள் போன்றவற்றை வாங்கியுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வியாபாரிகள், இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்போது அந்த நபர், போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து, வியாபாரிகளிடம் மோசடி செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.