ஆண் குழந்தை விற்பனை விவகாரத்தில் சாத்தூர் தம்பதி உள்பட 6 பேர் மீது வழக்கு
ரூ.45 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை விவகாரத்தில் சாத்தூர் தம்பதி உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாத்தூர்,
ரூ.45 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை விவகாரத்தில் சாத்தூர் தம்பதி உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
தங்களுக்கு குழந்தை இல்லாததால் மிகவும் மனவருத்தத்துடன் இருப்பதாக கோமதி தனது உறவினர் மகேசுவரியிடம் கூறி உள்ளார். அதற்கு அவர், தனது உறவினருக்கு 3-வதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது. அதை தத்து எடுத்து வளர்க்கலாம் என கூறி இருக்கிறார்.
அதன்படி மகேசுவரி மூலமாக சேலம் மாவட்டம் புளியங்காட்டைச் சேர்ந்த அண்ணாமலை-அம்பிகா தம்பதிக்கு 3-வதாக பிறந்த ஆண் குழந்தையை கடந்த 9.12.2019 அன்று ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளனர். அந்த குழந்தைைய சுந்தரலிங்கம்-கோமதி வளர்த்து வந்தனர்.
காப்பகத்தில் ஒப்படைப்பு
சில மாதங்களிலேயே தாங்கள் விற்ற குழந்தையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அவர்கள் கூறி உள்ளனர். அதற்கு சுந்தரலிங்கம், பணம் ெகாடுத்து வாங்கிய குழந்தையை திரும்ப தர மாட்டோம் என கூறி இருக்கிறார். குழந்தையை தராவிட்டால் இது தொடர்பாக போலீசில் புகார் செய்ேவாம் என அண்ணாமலை மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன சுந்தரலிங்கம் அந்த ஆண் குழந்தையை மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டார். இந்த நிலையில், அண்ணாமலை தம்பதி தங்கள் குழந்தையை கேட்டு வந்த போது, சுந்தரலிங்கம் தங்களிடம் குழந்தை இல்லை. காப்பகத்தில் விட்டு விட்ேடாம் என கூறி உள்ளார்.
இதையடுத்து மதுரைக்கு வந்து காப்பகத்தில் உள்ள தங்கள் குழந்தையை ஒப்படைக்குமாறு அண்ணாமலையும், அவர் மனைவியும் கேட்டு உள்ளனர். அதற்கு காப்பக நிர்வாகிகள், குழந்தையை உங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று கூறி இருக்கிறார்கள்.
இதன் பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனை மூலம் காப்பகத்தில் உள்ள குழந்தையை தங்களுடையது என்று அண்ணாமலை தம்பதி நிரூபித்துள்ளதாக கூறப்படுகிறது.
6 பேர் மீது வழக்கு
குழந்தையை விற்றது தெரியவந்ததால், விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, அப்பையநாயக்கன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அண்ணாமலை-அம்பிகா, மகேசுவரி, அவரது கணவர் மற்றும் குழந்தையை வாங்கிய சுந்தரலிங்கம்-கோமதி தம்பதி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.