ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தில் ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோட்டைப்பட்டினம் கடைவீதியில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசு மற்றும் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முபாரக், த.மு.மு.க. தலைமை கழக பேச்சாளர் சரீப், எஸ்.டி.பி.ஐ. கட்சி உமர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டைப்பட்டினம் கடைவீதிகளில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் புதுக்கோட்டையில் பல்வேறு அமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் கே.எம். ஷரீப் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் யூசூப் ராஜா மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், உடை அணியும் உரிமையை நீதிமன்றங்கள் தடுக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.