தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினார்.
ராணிப்பேட்டை
அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினார்.
ஆட்சிமொழி கருத்தரங்கம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அலுவலக பணியாளர்களுக்கான ஆட்சிமொழி கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
முறையாக பின்பற்ற வேண்டும்
உலகில் தோன்றிய மூத்தகுடி பேசிய மொழி தமிழ் மொழி. உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்து இருந்தாலும் என்றும் நிலைத்திருக்கக் கூடிய மொழி தமிழ். செம்மொழியாக சொல்லப்பட்ட முதல் மொழி தமிழ். மற்ற மொழிகளுக்கு 4 இலக்கணம் மட்டுமே உண்டு. ஆனால் நம் தமிழ் மொழிக்கு எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என 5 இலக்கணம் உண்டு.
பல மொழிகளில் தனித்தியங்கும் தன்மை கொண்டவை தமிழ் மட்டும் தான். நம்முடைய தாய்மொழியில் அலுவல் நடைமுறைகளையும், கோப்புகளையும் பின்பற்ற இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழியை அரசு அலுவலகங்களில் முறையாக பின்பற்ற வேண்டும். அரசின் ஆட்சி மொழி சட்டத்திற்கு இணங்க மக்களுக்காக செயல்படும் அரசுத்துறைகளில் அரசின் நிர்வாக மொழியான தமிழ் மொழியில் அரசு துறையின் பணிகள் சிறப்புற நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி
தொடர்ந்து நடந்த பயிலரங்கிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ராஜேஸ்வரி ஆட்சி மொழி செயலாக்கம் அரசாணைகள் என்னும் தலைப்பிலும், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் சிவராஜி மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் என்னும் தலைப்பிலும் பயிற்சி அளித்தனர்.
மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சுந்தர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோரும் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில் சோளிங்கர் தமிழ் சங்கர் கவிஞர் இனியவன், தமிழ்ச்செம்மல் விருதாளர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் நன்றி கூறினார்.