உர விற்பனையில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை

உர விற்பனையில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-03-18 18:09 GMT
கிருஷ்ணகிரி:
உர விற்பனையில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உரம் இருப்பு 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா- 2,193 டன், டி.ஏ.பி-1,139 டன், பொட்டாஷ்-518 டன், காம்ப்ளக்ஸ் 4,192 டன் மற்றும் எஸ்.எஸ்.பி-216 டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
உர விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் மற்றும் உரங்களின் இருப்பு விவரம் விவசாயிகள் அனைவரும் அறியும் வகையில் தகவல் பலகை பராமரிக்க வேண்டும். உரிமத்தில் பதிவு செய்துள்ள முதன்மை சான்று வழங்கிய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே உரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளிடம் ஆதார் அட்டை பெற்று விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
கடும் நடவடிக்கை 
உரம் வாங்கும் விவசாயிகளிடம் கையொப்பம் பெற்று ரசீது வழங்க வேண்டும். பயிர் சாகுபடி பரப்பிற்கு தேவைப்படும் அளவுக்கு மட்டுமே உரங்கள் வழங்க வேண்டும். அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பும், விற்பனை முனைய கருவியின் இருப்பும் நேர் செய்து இருப்பு பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
விவசாயிகள் அல்லாதவர்களுக்கு உர விற்பனை செய்வது அல்லது ஒரு நபருக்கு அதிக விலையில் உரங்கள் விற்பனை செய்வது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பிற மாவட்ட விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்வது மற்றும் அண்டை மாநில மற்றும் மாவட்டங்களுக்கு உர மாற்றம் செய்வது உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்