குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா தோரணம்பதி ஊராட்சி குமராம்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்ட குழாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடி-சேலம் தேசிய நெடுஞ்சாலையை தோண்டியபோது சேதம் அடைந்தது.
இதனால் அவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியும், விரைவில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் கிராமம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சேதம் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், அதைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர்-ஊத்தங்கரை சாலையில் நேற்று மதியம் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.