முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கம்பம்:
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள சுருளிவேலப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சாமிக்கு பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மலர்களால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் கம்பம் கவுமாரியம்மன் கோவில் வளாகத்தில் பாலமுருகன் சன்னதி, கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் சண்முகநாதர் சன்னதி, ஆதிசக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் சுப்பிரமணியசாமி சன்னதி ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பங்குனி உத்திரத்தையொட்டி வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் பக்தர்கள் நீராடினர். பின்னர் கவுமாரியம்மன் மற்றும் கன்னீஸ்வரமுடையாரை வழிபட்டனர். வீரபாண்டி அருகே முத்துதேவன்பட்டியில் உள்ள வெற்றி வேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வெற்றிவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
போடி தென்றல் நகரில் அமைந்துள்ள கன்னிமூல கணபதி கோவில் முருகன் சன்னதியில் பங்குனி உத்திரத்தையொட்டி 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு முருகன், வள்ளி-தெய்வானைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.