தர்மபுரி அன்னசாகரத்தில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்

தர்மபுரி அன்னசாகரத்தில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்

Update: 2022-03-18 17:11 GMT
தர்மபுரி:
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர்.
தேர்த்திருவிழா
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு சாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. 
பின்னர் சாமி திருக்கல்யாண உற்சவமும், தோரணவாயில் ஊஞ்சல் சேவையும், மயில்வாகன உற்சவமும் நடந்தது. தொடர்ந்து விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
பங்குனி உத்திர தேரோட்டம்
இதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடைபெற்றது. மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டம் நடந்தது. இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) வேடர்பறி உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) விழா கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவமும், வருகிற 21-ந் தேதி சயன உற்சவமும், 22-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்