பகல் நேரத்தில் விவசாயிகளுக்கு சரியாக மின்சாரம் வழங்கப்படுவது இல்லை-காங்கிரஸ் குற்றம்சாட்டு
பகல் நேரத்தில் விவசாயிகளுக்கு சரியாக மின்சாரம் வழங்கப்படுவது இல்லை என்று சட்டசபையில் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது
பெங்களூரு: பகல் நேரத்தில் விவசாயிகளுக்கு சரியாக மின்சாரம் வழங்கப் படுவது இல்லை என்று சட்டசபையில் காங் கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
கர்நாடக சட்டசபையில் துறைகள் மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் வெங்கடராவ் நாடகவுடா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
மோட்டார் உபகரணங்கள்
கர்நாடக பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு டீசல் மானியம் வழங்க ரூ.500 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. 5 ஏக்கர் வைத்துள்ள ஒரு விவசாயிக்கு ரூ.1,250 மட்டுமே கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த நிதியை விவசாயத்துறையில் வேறு ஏதாவது திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
விவசாயிகளுக்கு நீர், தரமான மின்சாரம் மற்றும் விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுத்தால் போதும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்துவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இன்று வரை அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. கர்நாடகத்தில் மின்சார உற்பத்தி அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் விவசாய பம்புசெட்டுகளுக்கு இரவு நேரத்தில் மின்சாரம் வினியோகம் செய்கிறார்கள்.
இவ்வாறு வெங்கடராவ் நாடகவுடா பேசினார்.
மும்முனை மின்சாரம்
அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், ‘விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சரியான முறையில் வழங்கப்படுவது இல்லை. இரவு நேரத்தில் மின்சாரம் வழங்கினால் விவசாயிகள் எப்படி அதை சரியாக பயன்படுத்த முடியும்’ என்றார். அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த உறுப்பினர் எச்.கே.பட்டீல், ‘விவசாயிகளுக்கு இரவில் 4 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. பகலில் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவது இல்லை. இந்த நிலை இருந்தால் விவசாயிகள் எப்படி விவசாயம் செய்ய முடியும்?’ என்றார்.
அப்போது நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேசுகையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது 32 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. நமது தேவை 14 ஆயிரத்து 500 மெகவாட்டாக உள்ளது. ஆனால் இந்த மின்சாரத்தை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்க போதுமான மின் கட்டமைப்புகள் இல்லை. அதன் காரணமாக தான் மின் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின்மிகை மாநிலம்
இந்த மின் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் மூலம் மின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைய சிறிது காலம் ஆகும். போதுமான அளவுக்கு கட்டமைப்புகள் இருந்தால் தான் விவசாயிகளுக்கு தரமான மின்சாரம் வழங்க முடியும். கர்நாடகம் மின் மிகை மாநிலம்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், ‘விவசாயிகளுக்கு இரவு நேரத்தில் மின்சாரம் வழங்கப்படுவது உண்மை தான். இதை பகல் நேரத்தில் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்துறை மந்திரியுடன் கலந்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.