கூடலூர் பகுதியில் பங்குனி உத்திர திருவிழா
கூடலூர் பகுதியில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பால்குடம், காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பால்குடம், காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பங்குனி உத்திர திருவிழா
கூடலூரில் உள்ள சந்தன மலைமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 8.30 மணிக்கு பார்வுட் சிவன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப் பெருமான் எழுந்தருளி முக்கிய சாலைகள் வழியாக கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து காலை 6 மணிக்கு முருகன், அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், தொடர்ந்து சிறப்பு பூஜையும், பகல் 12 மணிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பால்குடம், காவடிகள் ஊர்வலம்
கூடலூர் அருகே தேவர்சோலை 8-ம் மைல் வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற்றது. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு 9-வது மைல் ஆற்றங்கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடிகள் எடுத்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.
இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி தேவர்சோலை பஞ்சாயத்து காலனி, சிவன் கோவில், நம்பர் 2 டிவிஷன் மண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல்கூடலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.