கொரோனா தொற்று குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி பண்டிகை உற்சாகம்

கொரோனா தொற்று குறைந்ததால் மராட்டியத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-18 15:41 GMT
கோப்பு படம்
மும்பை, 
கொரோனா தொற்று குறைந்ததால் மராட்டியத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 
  2 ஆண்டுகளுக்கு பிறகு...
திருவிழா மாநிலமான மராட்டியத்தை கொரோனா எனும் பெருந்தொற்று முடக்கிப்போட்டது. 2020-ம் ஆண்டு மாநிலத்தில் அடியெடுத்து வைத்த தொற்றின் விளைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தில் அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் கொண்டாட்டங்கள் தடைப்பட்டன.
 தற்போது நோய் தொற்று பெருமளவு குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஹொலி பண்டிகை பழைய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள் தெருக்களில் கூடி ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஆனந்தமாக பண்டிகையை கொண்டாடினர். மேலும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். 
இசை, நடனம்
குறிப்பாக மும்பை, புனே மற்றும் ஜல்காவ் போன்ற நகரங்களில் ஹோலி திருவிழா கொண்டாட்டங்கள் களை கட்டியது.  தெருக்களில் இசை வாத்தியங்களை இசைத்து, நடனமாடி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 
இதேபோல கடலோர கொங்கன் பிரந்தியத்திலும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை காண முடிந்தது. 
மகிழ்ச்சியாக இருக்கிறோம்...
2 ஆண்டுகளுக்கு பிறகு பழைய படி நடந்த கொண்டாட்டம் பற்றி டோம்பிவிலியை சேர்ந்த உதய் சிங் பந்தல் கூறுகையில், “மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் அச்சத்தில் வாழ்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு நிலைமை நன்றாக மேம்பட்டுள்ளது. எனவே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் பண்டிகை மனநிலையில் உள்ளனர்” என்றார். 
ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்காட் ஜெயேந்திர பவாரி கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான பண்டிகையை தவறவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார். 
 மேயர் கொண்டாட்டம்
மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மக்களுக்கு வண்ணங்களை பூசி விழாவை கொண்டாடினார். 
பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், மும்பை காட்கோபரில்  ‘ஹோலிகா’வை எரித்தார். மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினை தொடர்பாக மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக அவர் கூறினார். 
ஹோலி பண்டிகையை முன்னிட்டு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இந்த பண்டிகை மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழுமையின் வண்ணங்களை கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்