இணையதளம் வழியாக பரிவர்த்தனைகளில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும்

இணையதளம் வழியாக பரிவர்த்தனைகளில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-03-18 14:31 GMT
திருவாரூர்:
இணையதளம் வழியாக பரிவர்த்தனைகளில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பணம் கொடுத்து பொருளை வாங்கும் அனைத்து குடிமக்களும் நுகர்வோர் தான். உயிருக்கும், உடைமைக்கும் ஊறு விளைவிக்கின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகர்வோரை பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. ஓவ்வொரு பொருட்களின் தரம், அளவு, விலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். 
நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் 
நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு அவசியம் ரசீது பெற வேண்டும். அப்போது தான் பொருட்களின் சேவை குறைபாடு இருந்தால் நுகர்வோர் மன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இணையதளம் வழியாக பரிவர்த்தனைகளில் நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும்
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பரிசு-நற்சான்றிதழ்  
அதனைத்தொடர்ந்து உலக நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவினையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் ஒவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 13 பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், 9 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும்  பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக 11 நுகர்வோர் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு நற்சான்றிதழை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி, தாசில்தார் அன்பழகன், பள்ளி மற்றும் கல்லூரி குடிமக்கள் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா ரமேஷ், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---

மேலும் செய்திகள்