போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் முறையாக மூடப்படாத குழியால் தொடர் விபத்துக்கள்
போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் முறையாக மூடப்படாத குழியால் தொடர் விபத்துக்கள்
போடிப்பட்டி:
உடுமலையில் முக்கிய அலுவலகங்கள், போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் முறையாக மூடப்படாத குழியால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
பாதாள சாக்கடை
உடுமலையில் தாலுகா அலுவலகம், நீதி மன்றங்கள், கிளைச்சிறை, சார்பதிவாளர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தலைமை தபால் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய வீதியாக கச்சேரி வீதி உள்ளது.இந்த வீதியில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாததால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் பாதாள சாக்கடையில் கழிவு நீர் வெளியேறுவதில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இங்கு இரண்டு இறங்கு குழிகளுக்கு இடையில் கழிவு நீர் வெளியேறுவதற்கான குழாய்கள் அமைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மண் குவியல்
இதனையடுத்து இங்கு சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தை முறையாக மூடாமல் மண்ணைக் குவித்து வைத்துள்ளனர். 10 நாட்களுக்கு மேல் கடந்த நிலையிலும் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதி வழியாக முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் சாலை நடுவில் மண் குவியல் காணப்படுவதால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இது உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் மண் குவியலில் சறுக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே மண் குவியலை அப்புறப்படுத்தவும் சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.