பள்ளி மேலாண்மை குழுவில் பெண்களுக்கு முன்னுரிமை
பள்ளி மேலாண்மை குழுவில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
பொள்ளாச்சி
பள்ளி மேலாண்மை குழுவில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. இதையொட்டி பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த பள்ளிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி ராஜசேகரன் தலைமை தாங்கி பேசினார். இதில் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மறுகட்டமைப்பு
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. இந்த குழுவிற்கு பெற்றோரில் 15 பேரை உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும்.
இதில் ஒளிவு மறைவற்ற முறையை பின்பற்ற வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களே தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 75 சதவீதம் பெற்றோராக இருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் 10 பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்புக்கான விழிப்புணர்வு கூட்டம் தொடர்பான அழைப்பிதழ் மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு முன்னுரிமை
மறு கட்டமைப்பு குறித்த தகவல்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க வேண்டும். மாணவர்களின் பெயர், படிக்கும் வகுப்பு மற்றும் பெற்றோரின் பெயர், முகவரி கொண்ட பட்டியலை மறுகட்டமைப்பு நடைபெறும் 7 நாட்களுக்கு முன் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஒருவராவது இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
யாரும் இல்லையெனில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோராக தூய்மை பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலராக இருப்பார். குழுவின் தலைவர் பதவிக்கு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விழிப்புணர்வு கூட்டத்திற்கு வரும் பெற்றோருக்கு குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.