மதனகோபால சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

மதனகோபால சுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது.

Update: 2022-03-17 20:34 GMT
பெரம்பலூர்:

பங்குனி உத்திர திருவிழா
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் தாயார் சன்னதியில் கடந்த 15-ந்தேதி மாலை நடந்தது. நேற்று முன்தினம் வெண்ணெய்தாழி உற்சவமும், இரவில் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் உற்சவ சிலைகள் வண்ண மலர்களால் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டு, தேருக்கு எடுத்து வரப்பட்டு காலை 9 மணிக்கு ரதாரோஹன நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து 11 மணிக்கு தேரோட்டமும் நடந்தது.
தேரோட்டம்
இதில் பக்தர்கள் தேரை நிலையில் இருந்து வடம்பிடித்து நகர்த்தி சஞ்சீவிராயன்கோவில் தெரு, தெற்குத்தெரு, அய்யப்பன் கோவில் வழியாக இழுத்து வந்தனர். இளைஞர்களுடன் பெண்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து ஆர்வமுடன் கோவிந்தா... கோபாலா.. என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மதியம் 2 மணி அளவில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேர் கடைவீதி மற்றும் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக இழுத்து வரப்பட்டு மாலை 6.30 மணி அளவில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி கடை வியாபாரிகள் வீதியில் தண்ணீர் தெளித்து கோலமிடச்செய்து சீர்வரிசைகளை வழங்கி மதனகோபாலன் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரை வழிபட்டனர். தேர் நிலைநின்ற பின்பு தீர்த்தவாரியும், வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தன.
சீர்வரிசைகள்
தேரோட்டத்தின்போது வழிநெடுகிலும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் தலைமையில் திருமழிசை ஆழ்வார் கோவில் பட்டாச்சாரியார் திரிவிக்ரமன் பட்டாச்சாரியார் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து சீர்வரிசைகளை ஏற்று சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.
திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 20-ந்தேதி காலை மட்டையடி, இரவில் ஊஞ்சல் உற்சவமும், 21-ந்தேதி காலை மஞ்சள் நீர், இரவில் விடையாற்றி விழாவும் நடக்கிறது. திருத்தேர் எட்டாம் திருவிழா 24-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவில் பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.
தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோவில் சீர்பணியாளர்கள், தினசரி உற்சவ கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்