குடிநீா் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தா.பேட்டை
துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கண்ணனூர் பாளையம் பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் துறையூரில் இருந்து நாமக்கல் மற்றும் முசிறி செல்லும் சாலையில் பாளையம் பிரிவுரோடு என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், துறையூரில் இருந்து நாமக்கல் மற்றும் முசிறி சாலை வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் சிரமப்பட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி செயற்பொறியாளர் நடராஜன் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கூறியதன்பேரில், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக சாலைமறியல் நடைபெற்றபோது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பொதுமக்கள் வழிவிட்டனர்.
மணப்பாறை
இதேபோல, மணப்பாறை அருகே உள்ள எப்.கீழையூர் காலனி பகுதிக்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து எப்.கீழையூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதியடைந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் எப்.கீழையூர் காலனி பிரிவு அருகே காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலின் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.