பள்ளத்தில் தவறி விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்பு
பள்ளத்தில் தவறி விழுந்த எருமை மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கட்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். விவசாயி. இவருக்கு சொந்தமான எருமை மாடு அங்குள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றநிலையில், நேற்று நள்ளிரவில் அங்கு 10 ஆடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து மாட்டை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுபற்றி அவர்கள், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள், பள்ளத்தில் இறங்கி கயிறு கட்டி எருமை மாட்டை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.