தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்கம்
தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன், தலைவர் செந்தில்குமார், பொருளாளர் பழனிஅய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு துணை போகாமல் சட்ட விரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கண்டனத்துக்குரியது
பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், “ காவிரி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு விரோதமாக கர்நாடக மாநில பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்படுகிறது. மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது; சட்ட விரோதமானது.
தடுத்து நிறுத்துவோம்
அடுத்தகட்டமாகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாய சங்கங்கள், கட்சிகளையும் ஒருங்கிணைத்து மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். அது ஒன்றுதான் தமிழ்நாட்டினுடைய நீராதாரத்தை, பாசன உரிமையைப் பாதுகாப்பதற்கான அடிப்படையான விஷயம்.
எனவே, இதில் எந்த விதமான வேறுபாடின்றி, அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைக்கிற முயற்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபடும். அணைக் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்”என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஞானமாணிக்கம், முனியாண்டி மாவட்ட குழுவினர் சுரேஷ்குமார், பாஸ்கர், ராம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.