மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல் 1½ வயது குழந்தை சாவு

கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2022-03-17 19:52 GMT
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. 
1½ வயது குழந்தை
திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் பாலகுமார்(வயது 30). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 1½ வயதில் அஸ்விதா என்ற பெண் குழந்தை இருந்தது. 
நேற்று பாலகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் லால்குடியில் இருந்து கும்பகோணத்திற்கு தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் கும்பகோணத்தில் இருந்து லால்குடி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார். 
பரிதாப சாவு
கபிஸ்தலம் அண்டகுடி கிராமத்தில் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரில் பாபநாசத்தை சேர்ந்த மவுனித்(23) என்பவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 1½ வயது குழந்தையை சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்ைத பரிதாபமாக இறந்தது. 
வலைவீச்சு 
இதுகுறித்து பாலகுமார் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) பாபநாசம் அழகம்மாள், ஏட்டு கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தலைமறைவான மவுனித் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்