வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை

Update: 2022-03-17 19:40 GMT
பென்னாகரம்:
தர்மபுரி பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்‌ வாலிபர் பயிலரங்கம் நேற்று நடந்தது. இதனை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. குறிப்பாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்த வேண்டுகோளை அவர் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.  அந்த வகையில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அரசு பணி போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். பெண்களுக்கு அறிவித்துள்ள உதவித்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். சிறு, குறு தொழில்களின் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மூலப்பொருட்களை வாங்கி தொழில் நடத்த முடியவில்லை. எனவே தமிழக அரசு மூலப்பொருட்களை வாங்கி தமிழக அரசு மானிய விலையில் வழங்கி சிறு குறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிப்காட் அமைப்பதற்காக நல்ல விளைநிலங்களையே கையகப்படுத்தி உள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் தரிசு, மேய்ச்சல்நிலம் ஆகிய நிலங்களை சிப்காட்டுக்கு கையகப்படுத்த வேண்டும் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டசெயலாளர் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரேஜீஸ்குமார், மாநில செயலாளர் பாலா, மாநில துணைசெயலாளர் பால சந்திரபோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்