பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
குமரி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 12 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாகர்கோவிலில் கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடா்ந்து 45 வயதை கடந்தவர்களுக்கும், 18 வயதை கடந்தவர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது.
15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது.
கலெக்டர் அரவிந்த்
நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில், 12 முதல் 14 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று (அதாவது நேற்று) அரசு பள்ளிகளில் 7-ம் வகுப்பு பயிலும் 6,902 மாணவ, மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5,755 பேர், பகுதி நேர பள்ளிகளில் பயிலும் 2,018 பேர், தனியார் பள்ளிகளில் பயிலும் 10,858 பேர், மத்திய அரசு பள்ளிகளில் பயிலும் 131 பேர் என 25,664 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
51,710 மாணவர்கள்
இதுபோல், மாவட்டம் முழுவதும் 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மொத்தம் 51,710 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி, மாநகர் நல அலுவலர் விஜயசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் (நாகர்கோவில்) பிரான்சிஸ் ஆரோக்கியராஜ், எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தயாபதி நளதம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலையா, விஜிலா ஜஸ்டஸ் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.