பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் தேரோட்டம்
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
சுசீந்திரம்,
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
குமரியின் குருவாயூராகவும், தங்கக் கொடிமரம் உடைய கோவிலாகவும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, தோல்பாவைக்கூத்து, பக்தி இன்னிசை போன்றவை நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி காலை 8.45 மணி அளவில் இரு தட்டு வாகனங்களில் சாமிகளை மேளதாளத்துடன் அலங்கரித்து வெளியே எடுத்து வந்தனர். தொடர்ந்து சாமி தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, விஸ்வசேனை, கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளினர்.
தொடர்ந்து சிறிய விநாயகர் தேரில் கைலாசநாதர், பார்வதி ஆகியோர் எழுந்தருளினர்.
வடம் பிடித்து இழுத்தனர்
பின்னர் சாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மோகனதாஸ், கோவில் கண்காணிப்பாளர் சிவகுமார், ஸ்ரீ காரியம் ஹரி பத்மநாபன், பா.ஜனதா மாவட்ட பொருளாளரும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான முத்துராமன், ராஜாக்கமங்கலம் யூனியன் கவுன்சிலர் ஷகிலா ஆறுமுகம், கோவில் ஒப்பந்ததாரர் கண்ணன், பறக்கை ஊராட்சி மன்ற தலைவர் கோசலை, முன்னாள் தலைவர் சிதம்பரம், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினர், மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேரோடும் ரத வீதியில் பக்தர்களுக்கு மோர், பானகாரம், அன்னதானம், தர்பூசணி போன்றவை பல்வேறு அமைப்பினர் சார்பில் வழங்கப்பட்டது.
வேட்டைக்கு எழுந்தருளல்
நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தேர் பகல் 11.20 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் வெடி முழக்கத்துடன் சாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
இரவு சப்தவர்ணமும், சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளலும் நடந்தது.
10-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணி அளவில் சாமி வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா போன்றவை நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், பறக்கை மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.