சிம்மபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
லாலாபேட்டை அருகே உள்ள சிம்மபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணராயபுரம்,
சிம்மபுரீஸ்வரர் கோவில்
லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சிம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது.
10-ந் தேதி சிம்மபுரீஸ்வரர் வீதி உலாவும், 12-ந் தேதி சேஷ வாகனத்திலும், 13-ந் தேதி ரிஷப வாகனத்திலும், 14-ந் தேதி கேடயம் வாகனத்திலும் சுகந்த குந்தளாம்பிகை-சிம்மபுரீஸ்வரர் வீதி உலா வந்தனர்.
இதையடுத்து, 15-ந் தேதி சுகந்த குந்தளாம்பிகை- சிம்மபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் லாலாபேட்டை பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 16-ந் தேதி குதிரை வாகனத்தில் சிம்மபுரீஸ்வரர் வீதி உலா வந்தார்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுகந்த குந்தளாம்பிகை- சிம்மபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். பின்னர் இந்த தேரை எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மேள, தாளம் முழங்கவும், பக்தர்கள் புடைசூழ தேர் முக்கிய வீதிகளில் அசைந்தாடி வந்தது. பின்னர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதனைதொடர்ந்து சுகந்த குந்தளாம்பிகை- சிம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் லாலாபேட்டை, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம், சிந்தலவாடி, புணவாசிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.