கோட்டையிருப்பு பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா
14 ஆண்டுகளுக்கு பிறகு கோட்டையிருப்பு பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர்,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி இருந்தது.இதன் மூலம் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்களில் பாசனம் செய்து நெல் விவசாயம் செய்து அறுவடை செய்தனர். விவசாயத்திற்கு போக மீதமிருந்த தண்ணீர் வற்றிய சூழ்நிலையில் கிராமத்தின் சார்பில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக மடைநாச்சி அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர்.பின்னர் கிராமத்தின் சார்பில் கொடியசைத்த பின்னர் மீன்பிடிக்க ெதாடங்கினர். விழாவில் காக்காளிப்பட்டி கட்டையம்பட்டி தேரேந்தல்பட்டி கருப்பூர் காரையூர் நாட்டார்மங்கலம் ஆலம்பட்டி சுண்ணாம்பிருப்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து இத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.மீன்வலை, ஊத்தா, பரி, கச்சா, கொசுவலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மீன் பிடித்தனர். இதில் கென்டை, கட்லா, ஜிலேபி, குரவை, விராமீன், உள்ளிட்ட வகையான மீன்கள் பிடிபட்டது. பின்னர் அந்த மீன்களை தங்கள் வீடுகளுக்கு சென்று மீன்குழம்பு வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.