கோவிலில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே கோவிலில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியை சேர்ந்த அய்யாசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், வரதராஜ் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த 2 தரப்பினருக்கும் சொந்தமான பொண்ணு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை வரதராஜ் தரப்பினர் செய்து வந்தனர். அப்போது அய்யாசாமி தரப்பை சேர்ந்த குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, வரிவசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவிழாவை நிறுத்தக்கோரி அய்யாசாமி தரப்பினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள 2 தரப்பையும் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கிராமத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரதராஜ் தரப்பு சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் இன்று (வெள்ளிக் கிழமை) பங்குனி உத்திர விழாவையொட்டி கோவிலில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி பூஜை பொருட்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.