சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கீரமங்கலம்:
பங்குனி உத்திர திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி நகரம் கிராமத்தில் செயற்கை மலையின் மீது பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விழாக்குழுவினரால் சிறப்பு வழிபாடுகளும், வாணவேடிக்கை, மங்கள வாத்தியங்கள் முழங்க அலங்கார வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடத்தப்படுவதுடன் மதியம் அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது..
தேரோட்டம்
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. பழமையான பிரமாண்டமான தேரில் காய், கனி, பூ, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி எழுந்தருளினார். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரின் சக்கரங்களில் கட்டைகள் கொடுத்து வீதிகளில் திரும்பிச் ெசல்லும் பணிகளை அப்பகுதி தச்சர்கள் செய்திருந்தனர்.
தேர் முக்கிய வீதிகளில் ஆடி ஆசைந்து வந்தது. பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.
அழகு நாச்சியம்மன் கோவில்
அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் கிராமத்தில் அழகு நாச்சியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது. கடந்த 15-ந் தேதி எட்டாம் நாள் திருவிழாவையொட்டி பெண்கள் வீடுகளில் விரதமிருந்து மது குடம் மற்றும் முளைப்பாரி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் 9-ம் நாள் திருவிழாவையொட்டி காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அதனை தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அழகுநாச்சியம்மன் எழுந்தருளினார். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் செல்லும் வழிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் மண்டகப்படி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பனையூர் பொதுமக்கள் மற்றும் அம்பலத்தார்கள் செய்து இருந்தனர்.