கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
காவிரி மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், மேதாதுவில் அணை கட்டுவதை தடுக்க மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை கட்டுவதால் காவிரி டெல்டா பாலைவனமாகும். தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அணை கட்டுவதை கைவிட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் சுப்பிரமணியன், நகர செயலாளர் ராஜசேகர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியசெயலாளர் இடும்பையன், நகர செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
குடவாசல்
குடவாசல் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடவாசல் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமதாஸ், அந்தோணிசாமி, மாரிமுத்து, அருமைகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் கெரக்கொரியா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட குழு உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ். சாமிநாதன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள். காரல் மார்க்ஸ், கதிரேசன், நகர செயலாளர் கோபு, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், சி.ஐ.டி.யூ.பொறுப்பாளர் பாண்டியன், நகர குழு உறுப்பினர் கோதாவரி, ஒன்றியக்குழு உறுப்பினர் மதியழகன், விவசாய சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முத்துப்பேட்டை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முத்துப்பேட்டை ஆசாத்நகர் தடுப்பணையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார். இதில் கலந்துக்கொண்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தடுப்பணை கதவுக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.