தற்கொலை செய்த பெண்ணின் தந்தை வயலில் பிணமாக கிடந்தார்

சீர்காழி அருகே 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்ணின் தந்தை வயலில் பிணமாக கிடந்தார். அவர் கைப்பட எழுதியை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-17 18:06 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்ணின் தந்தை வயலில் பிணமாக கிடந்தார். அவர் கைப்பட எழுதியை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல நாங்கூர் கிராமம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கார்த்திக்(வயது 27). சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் சாலையை சேர்ந்த சண்முகம் மகள் பாரதி(22) ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
இவர்களுக்கு 3 வயதில் கவுசிக் என்ற மகனும், 1 வயதில் பவதாரணி என்ற குழந்தையும் இருந்தனர். இவர்கள் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி. நகரில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். 
குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 14-ந் தேதி பாரதி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாரதியின் தந்தை சண்முகம்(57) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. 
வயல்வெளியில் பிணமாக கிடந்தார்
இரண்டு நாட்களாக சண்முகம் வீட்டிற்கு வராததால் பதறிப்போன சண்முகத்தின் மனைவி சித்ரா வைத்தீஸ்வரன்கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சண்முகம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
பிணமாக கிடந்த சண்முகத்தின் சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது தெரிய வந்தது. அந்த கடிதத்தை சண்முகம் தனது கைப்பட எழுதி இருந்தார்.   அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல, என் மனைவியும், மகனும் என்னை மன்னிக்க வேண்டும். முடிந்தால் அரசு எனது மகனுக்கு ஒரு வேலை கொடுத்து என் குடும்பத்தை காப்பாற்றவும். இப்படிக்கு சண்முகம் என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்