பழனி பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

பழனி பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-17 17:23 GMT
பழனி:
பழனி நகரின் மைய பகுதியில் வ.உ.சி. பஸ்நிலையம் அமைந்துள்ளது. இதில் கிழக்கு பகுதியில் டவுன் பஸ்களும், மேற்கு பகுதியில் புறநகர் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. பஸ்நிலைய நடைமேடையில் டீக்கடை, இனிப்பு கடை என ஏராளமான கடைகள் உள்ளன. இந்தநிலையில் பஸ்நிலைய கிழக்கு பகுதியில் உள்ள நடைமேடையில் நேற்று ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பஸ்நிலைய மேற்கூரை பெயர்ந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்தது. இதனால் அங்கு நின்ற பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிமெண்டு யார் மீதும் விழாததால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி கடைக்காரர்கள் கூறுகையில், பஸ்நிலைய கட்டிடம் கட்டி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது பல இடங்களில் மேற்கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட நடைமேடை மேற்கூரை 2 முறை பெயர்ந்து விழுந்தது. எனவே பஸ் நிலைய கட்டிடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்